ஜேர்மன் நாட்டில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக நாடுகடத்த, கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் கைது செய்யப்பட்ட 31 புகலிட கோரிக்கையாளர்கள் Düsseldorf விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்கள் இன்று (31/03/2021) புதன்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், ஜேர்மனிய மனிதநேய மற்றும் அகதிகள் நலன்சார் அமைப்புக்கள், சட்டவல்லுனர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினாலும், புகலிடம் கோரியவர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை அடிப்படையிலும் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஈழத்தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து Düsseldorf விமான நிலையத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அந் நாட்டின் இடதுசாரி கட்சிகள் மற்றும் ஏனைய போராட்ட அமைப்புகளை சேர்ந்த பலரும் தமிழர்களும் தமிழர்களை நாடுகடத்துவதை நிறுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.