பணமும் செல்வமும் பெருகி ஓட யாருக்குத்தான் ஆசை இருக்காது? சொல்லப்போனால் , நம் அனைவருக்கும் அந்த ஆசை இருக்கின்றது. நாம் வாழ்வதற்கு பணம் தேவைப்படுவதால் , அதனை சம்பாதித்துக்கொள்ள அன்றாடம் அயராது மிக கடினமாக வேலை பார்க்கின்றோம்.
நமது அன்றாட பழக்கவழக்கங்களை பொறுத்தே நமது வீடுகளில் ஸ்ரீதேவி லட்சுமி தேவி குடிகொள்வதும், மூதேவி குடிகொள்வதும் அமைகின்றது.
லட்சுமி தேவி என்பவள் பணம் மற்றும் செல்வத்திற்க்கான கடவுள் என்று நம்பப்படுகின்றது. லட்சுமி தேவி குடிகொண்டிருக்கும் வீட்டில் பொன்னும் பொருளும் அருளப்பட்டு நிறைந்திருக்கும் என நம்பப்படுகின்றது.
லட்சுமி தேவியை ஈர்க்க வீட்டில் செய்யக்கூடியவை.
தினசரி எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கை அல்லது குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம்.
பூஜை அறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும்.
தினந்தோறும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்மையைத் தரும். பூஜை அறையில் ஏற்றப்படும் தீபங்களை நாமாக அணைக்கக்கூடாது. அது தானாக முழுவதும் எரிந்து அணைவது நல்லது.
வீட்டில் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது சாமி கும்பிட வேண்டும். வாரத்துக்கு இருமுறையாவது வீட்டை கழுவி, அப்படியே பூஜை அறையையும் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகள் வீட்டுக்குள் வராது என்பது ஐதீகம்.
வீட்டில் துளசி மற்றும் வேப்ப மரம் வளர்ப்பது நல்லது. தினந்தோறும் அதன் அருகிலாவது நாம் சென்று வருவது சிறப்பு.
பூஜை அறையிலோ ,வீட்டின் முற்றத்திலோ தெய்வப்படங்களை கிழக்கு நோக்கி வைப்பது நல்லது. சாமிக்கு இலையில் வைத்துத்தான் உணவு மற்றும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.
பூஜை முடிந்ததும் பெண்கள் நெற்றியிலும் , மாங்கல்யத்திலும் குங்குமம் கட்டாயம் வைக்க வேண்டும். வலம்புரி சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேருமாம். அந்தச் சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும்.
இவற்றை தினமும் சரியாக பின்பற்றி வந்தால் நமது வீடுகளில் லட்சுமி தேவி குடிகொண்டு செல்வமும் மகிழ்ச்சியும் பொங்கி வழியும்.