ஆடி பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுவது வரலட்சுமி விரதமாகும்.
இது பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகா லட்சுமி தேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம்.
மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினத்திற்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த அற்புத விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும்.
ஆனால் இந்த முறை ஆவணி தொடங்கிய பின் வரக்கூடிய பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதாவது 2021 ஆகஸ்ட் 20 (ஆவணி 4) அன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வெள்ளிக் கிழமையில் பொதுவாக காலை 9.15 – 10.15 வரையிலும், மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரமாக உள்ளது.
இந்த நேரத்தில் வரலட்சுமி பூஜை செய்ய சிறந்த நேரம். அப்படி இல்லை என்றால், பொதுவாக வீட்டில் விளக்கேற்றும் அந்தி சாயும் நேரத்தில் பூஜை செய்வது நல்லது.
வரலக்ஷ்மி விரதத்தைக் கடைப்பிடிப்பதால் 16 வகை செல்வங்கள் பெற்றிடலாம். அதிலும் குறிப்பாக யார் விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ அவருக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
கன்னிப் பெண்களுக்கான வரலக்ஷ்மி விரதம் :
திருமண வயதை அடைந்துள்ள கன்னிப்பெண்கள் இந்த அற்புத வரலக்ஷ்மி விரதம் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
சிறந்த வாழ்க்கைத் துணை அமைவதோடு, மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்த வாழ்க்கை அமையும்.
சிறந்த கணவர் அமைய வேண்டும் என மகாலட்சுமியை நினைத்து விரதம் இருக்க வேண்டும்.
சுமங்கலி பெண்கள் எப்படி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்
சுமங்கலிப் பெண்கள் இந்த அற்புதமான விரதத்தைக் கடைப்பிடிப்பதால், தன் கண்வரின் ஆயுள் அதிகரிக்கும்.
கணவருக்கு சிறந்த வேலை, தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும். அதன் மூலம் குடும்பம் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
குழந்தை வரம் வேண்டுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்றும். பிள்ளைகளின் ஆரோக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு சிறப்பாக அமையும். லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறை:
வீடு அல்லது அலுவலகத்தில் தென் கிழக்கு மூலையில் சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் அம்மன் முகம் எழுப்ப வேண்டும்.
வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைத்து வணங்கலாம். சிலையைத் தாழம்பூவால் அலங்கரித்து பின் அதை ஒரு பலகை மீது வைக்கவும்.
பின் சிலை முன் ஒரு வாழையிலை போட்டு, ஒரு படி பச்சரிசி பரப்பி, மாவிலை, தேங்காய், எலுமிச்சை, பொன், பழங்கள் வைத்து, சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.
கும்ப பூஜைக்கு பின் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்ட லட்சுமிகளுக்கு பிடித்தமான அருகம் புல் தூவி பூஜை செய்யலாம்.
பூஜையின் போது மகாலட்சுமி ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஆகியவற்றை படிக்கலாம்.
வரலட்சுமி விரத பூஜைக்காக வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுக்க வேண்டும்.
நைய்வேத்தியமாக கொழுக்கட்டை படைக்கலாம்.
சந்தனத்தால் செய்யப்பட்ட அம்மனின் சிலையை மறுநாள் நீர் நிலைகளில் கரைத்துவிட வேண்டும்.