நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வுகள் அடங்கிய, 10 அம்ச முன்மொழிவு ஒன்றை, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சமர்ப்பித்துள்ளார்.
தீர்வுகள் அடங்கிய முன்மொழிவை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பியுள்ளதாக, அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் அமைச்சரவையில் இந்த முன்மொழிவை சமர்ப்பித்ததாகவும், எனினும் அமைச்சரவை அதனை நடைமுறைப்படுத்த தவறியதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதை மையமாக வைத்து, இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிக எரிபொருள் பயன்படுத்தும் 2000 சீசீ இயந்திரங்களைக் கொண்ட கார்கள் மற்றும் ஜீப்களை இயக்குவதற்கு தற்காலிக தடை விதித்தல்.
4 நாட்கள் வேலை வாரம் அல்லது மூன்று நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்துதல், எஞ்சிய இரண்டு நாட்களில் வீட்டிலிருந்து வேலை செய்தல்.
பல்வேறு அரச அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்வதைத் தடுக்க, அரச அலுவலகங்களின் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குதல்.
அனைத்து அரச ஊழியர்களையும் அவர்களது வீடுகளுக்கு அருகில் உள்ள அலுவலகங்களுக்கு மாற்றுதல்.
பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு நடத்தி, எஞ்சிய இரண்டு நாட்கள் இணைய வகுப்புகளை நடத்துதல்.
பாடசாலை செல்ல முடியாத மாணவர்களுக்கு சூம் அல்லது இணையவழியில் வகுப்பில் கலந்துகொள்ள அனுமதியளித்தல்.
அனைத்து தனியார் நிறுவனங்களும் சூம் அல்லது ஏனைய இணைய தளங்கள் மூலம் கூட்டங்களை நடத்தல்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏனைய நாடுகளைப் போலவே நெகிழ்வான வேலை நேரத்தை அறிமுகப்படுத்தல்.
குறுகிய தூர பயணங்களுக்கு ஆசனம் இல்லாத பேருந்துகளை அறிமுகப்படுத்தல்.
துவிச்சக்கரவண்டி பயன்பாட்டை ஊக்குவிக்க ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துதல் ஆகிய யோசனைகளையே அவர் முன்வைத்துள்ளார்.