அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் அனைத்தும் நாளை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி கல்வி பாதுகாப்பு மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் உள்ளடக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் அரச ஊழியர்கள், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களை ஊக்குவிப்பதற்கும் குறித்த அரச நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்து அரச நிறுவனங்களும் நாளை மூடப்படவுள்ள நிலையில் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 2023ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவுறுத்தல் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2022 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தகவல்களையும் விண்ணப்பங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.