இந்த ஆண்டில் இதுவரை 1,493 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு
மாலைதீவு கடற்பரப்பில் வைத்து, 24 போதைப்பொருள் மூட்டைகளுடன் ஆறு நபர்களுடன் பயணித்த ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இலங்கைத் தரப்பில் இருந்து பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள் குழுவொன்று மாலைதீவுக்குச் சென்றுள்ளனர். குறித்த இடத்தில் மேலதிக விசாரணைக் கடமைகளை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கைகளுக்குப் பின்னர், கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சாட்சியங்கள் அனைத்தையும் இலங்கைக்குக் கொண்டுவரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் அளவுகளில், ஹெரோயின்1,493 கிலோகிராம், கஞ்சா 15,500 கிலோகிராம், ஐஸ் 2,554 கிலோகிராம், கொக்கெய்ன் 32 கிலோகிராம், ஹஷீஸ் 604 கிலோகிராம், மாத்திரைகள் 1,44,000 என்பன கைப்பற்றப்பட்டது என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய காலப் பகுதியில் மட்டும், ஹெரோயின்: 108 கிலோகிராம், ஐஸ் 268 கிலோகிராம், கஞ்சா: 388 கிலோகிராம், குஷ்: 4 கிலோகிராம், ஹஷீஸ்: 25 கிலோகிராம், போதை மாத்திரைகள்: 4,400 ஆகும். இந்த இரண்டு வார காலப் பகுதியில் பல நபர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், 9 சட்டவிரோதச் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




