யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு 2,500 விசேட வீடுகள்!
இறுதி யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இன்னும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்காகப் புதிய வீட்டுத் திட்டமொன்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (09) அறிவித்துள்ளார்.
2009-ல் போர் முடிந்தும் இன்னும் முகாம்களில் வசிக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்காக 2,500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபாய் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையக மக்களுக்கான உதவி: இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையகத் தோட்டப்புற மக்களுக்கும் புதிய வீடுகளை அமைக்கும் பணிகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் எமது மக்கள் இன்னும் முகாம்களில் இருப்பது கவலைக்குரியது. டித்வா (Ditwah) சூறாவளிப் பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியில், இந்த மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களையும் நாம் கைவிடப்போவதில்லை. 2026 ஆம் ஆண்டு இலங்கையில் அதிகளவான வீடுகள் கட்டப்படும் ஆண்டாக மாறும் என ஜனாதிபதி தெரிவித்தார்.





