பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியின் மெகா திட்டம் – ஒரு வீட்டுக்கு 50 இலட்சம் நிதி!
‘டித்வா’ (Ditwah) புயல் அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்காக, முன் எப்போதும் இல்லாத வகையில் சுமார் 25,000 புதிய வீடுகளைக் கட்டித் தரும் மாபெரும் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
முழுமையாகச் சேதமடைந்த ஒரு வீட்டிற்குப் பதிலாக, முன்பிருந்ததை விடச் சிறந்த தரமான வீட்டை அமைக்க 50 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
முதற்கட்டமாக 20 இலட்சம் ரூபாயும், கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து தலா 15 இலட்சம் வீதம் இரு தவணைகளாக மீதித் தொகையும் வழங்கப்படும்.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்க தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இந்த வீடுகளை அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் மிக விரைவாகக் கட்டி முடிக்க ஜனாதிபதி இலக்கு நிர்ணயித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவிப்பின்படி, 2026 ஆம் ஆண்டு இலங்கையில் அதிகளவான வீடுகள் கட்டப்படும் ஆண்டாக அமையும்:
“எமது மக்களின் வாழ்க்கை தரம் தற்போதைய நிலையிலிருந்து மேம்பட வேண்டும். சிறந்த வருமானம், கல்வி, ஆரோக்கியம் மற்றும் நல்லதொரு இல்லத்தை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம்,” என ஜனாதிபதி இதன்போது உருக்கமாகத் தெரிவித்தார்.





