பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட 76 இராணுவ வாகனங்கள் நவீனமயமாக்கப்பட்டு மீண்டும் சேவையில் இணைப்பு!
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலின் பேரில், இராணுவத்தில் நீண்டகாலமாகப் பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்களை நவீனமயமாக்கி மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த வாகனங்கள் இன்று வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 24) முதல் இராணுவச் சேவையில் மீண்டும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
‘தூய இலங்கைத் திட்டத்துடன்’ இணைந்து செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம், வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்குச் செலவிடப்படும் பெரும் தொகை அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாகனங்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், இராணுவத்தால் வாடகை அடிப்படையில் பெறப்படும் வாகனங்களுக்கு மாதந்தோறும் செலவிடப்படும் சுமார் 10 மில்லியன் ரூபா அரச நிதியைச் சேமிக்க முடியும். இந்தப் பணத்தை இராணுவம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும்.
மீட்கப்பட்ட வாகனங்கள்:
இலங்கை மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியினால் செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், லொறிகள், பேருந்துகள், தண்ணீர் பவுசர்கள், யூனிப்பெல்கள், கெப்கள், ஆம்புலன்ஸ்கள், வேன்கள் மற்றும் கழிவுநீர் பவுசர்கள் உள்ளிட்ட 76 வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.





