நாளை மாலை கரையைக் கடக்கவுள்ள தாழமுக்கம் : வெளியான அறிவிப்பு
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழமுக்கம், தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (09.01.2026) மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணிக்குள் தாழமுக்கம் கரையை கடக்கக்கூடும்.
இலங்கையின் தென்கிழக்கு திசையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதி ஊடாக இந்தத் தொகுதி நிலப்பரப்பிற்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 2.00 மணி அளவில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக 250 கி.மீ தொலைவில் இந்தத் தாழமுக்கம் மையம் கொண்டுள்ளது.
காற்றின் வேகம் மணிக்கு 45 கி.மீ முதல் அவ்வப்போது 70 கி.மீ வரை மிக ஆவேசமாக வீசக்கூடும்.
அலைகளின் உயரம் சுமார் 2.5 மீற்றர் முதல் 3.5 மீற்றர் வரை எழும்பக்கூடும். இதனால் கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை மற்றும் காலி வரையிலான கடலோரப் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை தொழிலுக்குச் செல்வதை முற்றாகத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





