திருகோணமலையில் சீறும் அலைகள்: மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்லத் தடை!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக, திருகோணமலை கடற்பரப்பில் இன்று (08.01.2026) கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கடல் கொந்தளிப்பாக இருப்பதனாலும், பலத்த காற்று வீசுவதனாலும் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இன்று மழை நிலைமை அதிகரித்து காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





