நடுரோட்டில் வாகனங்களை அடித்துடைத்த மர்ம நபர்! பத்தரமுல்லையில் பரபரப்பு – மடக்கிப் பிடித்த பொலிஸார்
பத்தரமுல்லை – தியத உயனவிற்கு அருகில் உள்ள பிரதான வீதியில், ஓடிக்கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடியை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த நபர் ஒருவரை வெலிக்கடை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
நேற்று (12.01.2026) வீதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென தனது கையில் இருந்த இரும்பு கம்பியால் முன்னால் சென்ற காரின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த போக்குவரத்து பொலிஸார் அவரை மறிக்க முயன்றபோது, அவர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், வெலிக்கடை பொலிஸார் சந்தேக நபரைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து சென்று குறுகிய நேரத்திற்குள் மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்டவர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் வெறித்தனமான தாக்குதலால் சுமார் 4 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் எதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





