பதுளை மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றம் – பொலிஸார் தீவிர சோதனை
பதுளை மாவட்ட செயலக வளாகத்தில் மூன்று குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பினைத் தொடர்ந்து, அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
இன்று (14.01.2026) பதுளை மாவட்ட செயலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அந்த அழைப்பில், மாவட்ட செயலகம் மற்றும் தொழிலாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை பிற்பகல் 1:30 மணிக்கு முன்னதாக வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு, மாவட்ட செயலகத்திலிருந்த அனைத்து ஊழியர்களையும், பொதுமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மோப்ப நாய்களின் உதவியுடன் குறித்த வளாகம் முழுவதையும் தற்போது தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இந்த மிரட்டல் காரணமாகப் பதுளை நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அநாமதேய அழைப்பு வந்த தொலைபேசி இலக்கத்தை வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





