தாய்லாந்தில் சோகம்: பயணிகள் தொடருந்து மீது கிரேன் சரிந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் இன்று (14.01.2026) காலை இடம்பெற்ற கோர தொடருந்து விபத்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்டுமானப் பணியில் இருந்த கிரேன் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 22 பயணிகள் பலியாகியுள்ளனர்.
பெங்கொக் நகரிலிருந்து இன்று (14.01.2026) காலை உபோன் ரத்சதானி மாகாணத்தை நோக்கி புறப்பட்ட குறித்த தொடருந்து , நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தாய்லாந்து அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அதிவிரைவு தொடருந்து (High-Speed Rail) திட்டத்திற்காகத் தொடருந்து தண்டவாளங்களுக்கு அருகாமையில் பாரிய கிரேன் ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்தது. தொடருந்து அந்தப் பகுதியைக் கடக்க முற்பட்ட போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிரேன் திடீரென சரிந்து தொடருந்தின் நடுப்பகுதியில் விழுந்துள்ளது.
கிரேன் மோதியதில் தொடருந்தின் மூன்று பெட்டிகள் முற்றாக நசுங்கியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களைப் பல மணிநேரப் போராட்டத்திற்குப் பின் மீட்டனர். காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
அந்த தொடருந்தில் 195 பயணிகள் இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்துத் தாய்லாந்து போக்குவரத்து அமைச்சு உயர்மட்ட விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.









