தமிழ் மக்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்!” – பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தைப்பொங்கல் நல்வாழ்த்து
தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாட்டின் மறுமலர்ச்சி யுகத்திற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
“உழைப்புக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாடே தைப்பொங்கல். இயற்கையை மீறி எம்மால் பயணிக்க முடியாது என்பதை இத்திருநாள் உணர்த்துகின்றது” எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு இன்று ஒரு தீர்க்கமான மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது. கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் ஊடாக தேசத்தை ஒரு ‘மறுமலர்ச்சி யுகத்தை’ நோக்கி இட்டுச் செல்லும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்ற உண்மையை வலியுறுத்திய பிரதமர், நாட்டின் சுபீட்சத்திற்கான பயணத்தை ஒரு நற்பயிரை வளர்ப்பதற்கு ஒப்பிட்டுள்ளார்.
ஒருவரையொருவர் மதித்தல் மற்றும் கலாச்சார உரிமைகளைப் பேணுவதன் மூலம், நல்லிணக்கம் மிக்க ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து உறுதிபூணுவோம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தைத்திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறவும், இந்தப் புதிய பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரவும் மனதார வாழ்த்துகின்றேன்” எனப் பிரதமர் தனது செய்தியில் பதிவிட்டுள்ளார்.




