Welcome to Jettamil

உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் லூவ்ரு அருங்காட்சியகத்தில் துணிகரக் கொள்ளை! – நெப்போலியன் அரச கிரீட நகைகள் மாயம்!

Share

உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் லூவ்ரு அருங்காட்சியகத்தில் துணிகரக் கொள்ளை! – நெப்போலியன் அரச கிரீட நகைகள் மாயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரு அருங்காட்சியகத்தில் (Louvre Museum), வரலாற்றுச் சிறப்புமிக்க அரச கிரீட நகைகள் உட்பட விலைமதிப்பற்ற நகைகள் திருடப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பையும், ஐரோப்பிய அருங்காட்சியகங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 19, 2025) அருங்காட்சியகம் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, காலை 9:30 மணியளவில் நடந்துள்ளது.

திருடர்கள் அருங்காட்சியகத்தில் நடந்து வந்த கட்டுமானப் பணியிடத்தைப் பயன்படுத்தி, ஒரு எடைதூக்கி (Basket Lift) பொருத்தப்பட்ட லொறியை உபயோகித்து உள்ளே நுழைந்துள்ளனர்.

உள்ளே நுழைந்த கும்பல், ‘ஆங்கிள் கிரைண்டர்’ கருவியைப் பயன்படுத்தி கண்ணாடி ஜன்னல்களை உடைத்துள்ளது.

அவர்கள் குறி வைத்தது, பிரான்ஸ் அரச கிரீடங்கள் மற்றும் அரச நகைகள் வைக்கப்பட்டுள்ள ‘அப்பல்லோ கேலரி’ (Galerie d’Apollon) பிரிவில் இருந்த இரண்டு கண்ணாடிப் பெட்டிகளை ஆகும்.

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரன்ட் நூனெஸ் (Laurent Nuñez) பிரான்ஸ் இன்டர் ரேடியோவுக்கு அளித்த பேட்டியில்,

“இது ஒரு அனுபவமிக்க கும்பலின் கைவரிசையாகத் தெரிகிறது. அவர்கள் இடத்தை முன்கூட்டியே ஆய்வு செய்து, 7 நிமிடங்களில் நகைகளைத் திருடிக் கொண்டு தப்பியுள்ளார்கள்.”

எனத் தெரிவித்தார். திருடப்பட்ட நகைகள், நெப்போலியன் மற்றும் அவரது பேரரசிகளுக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க கிரீட நகைகள் உட்பட மிக உயர்ந்த பாரம்பரியம் மற்றும் அளவிட முடியாத மதிப்புடையவை என்றும் அவர் கூறினார்.

திருடப்பட்ட ஒன்பது நகைகளில், ஒன்று (பேரரசி யூஜீனியின் கிரீடம்) தப்பிக்கும்போது கைவிடப்பட்டுச் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் துணிகரத் திருட்டு குறித்து பாரிஸ் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோனா லிசா ஓவியம் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற கலைப் படைப்புகளைக் கொண்டுள்ள லூவ்ரு அருங்காட்சியகம், திருட்டுக்கான தடயங்களைப் பாதுகாக்க உடனடியாக மூடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை