சாமியார் வேடத்தில் களவாடிய நபர்! – கரவெட்டியில் பெறுமதி மிக்க தொலைபேசி திருட்டு!
யாழ்ப்பாணம், கரவெட்டி நெல்லியடி பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் உட்புகுந்த நபர் ஒருவர், சாமியார் வேடத்தில் வந்து கோயிலுக்குப் பணம் கேட்டு, வீட்டு உரிமையாளரின் பெறுமதி மிக்க கையடக்கத் தொலைபேசியைக் களவாடிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று கரவெட்டி, நெல்லியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சாமியார் வேடத்தில் வந்த அந்த நபர், வீட்டு உரிமையாளரின் மேசை மீது வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசியைக் களவாடியுள்ளார்.
இது தொடர்பாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் குறித்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். திருட்டில் ஈடுபட்ட குறித்த நபர், பணம் சேகரிக்கும் போர்வையில் பல இடங்களில் பெறுமதி மிக்க பொருட்களைத் திருடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்படிப் பலர் பல வேடங்களில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான முறையில் யாராவது நடமாடினால் உடனடியாகப் பொலிஸில் முறையிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





