கோண்டாவில் சிவபூமி மாற்றுத்திறனாளிகள் பாடசாலையில் கல்வி பயிலும் மாற்றுவலுவுடைய மாணவனான அலெக்சாண்டர் நிதுசன்ராஜ் தேசிய ரீதியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நடனத்தில் பங்குபற்றி முதலாவது இடத்தினை பெற்றுள்ளார்.
இவர் நடிகர் விஜயின் தீவிர இரசிகர். தொலைக்காட்சியில் நடனங்களை பார்த்து சுயமாக அதனை கற்றுக் கொண்டு, மேலதிக ஆசிரியர்களின் வழிகாட்டலில் நடனத்தை கற்று இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
இவர் 6வயதில் குறித்த பாடசாலையில் சேர்க்கப்பட்டார். தற்போது இவருக்கு வயது 21. இவர் குறித்த பாடசாலைக்கு வரும்போது வாய் பேசவும் முடியாத நிலையில் காணப்பட்டார். அதன்பின்னர் பாடசாலையில் வழங்கப்பட்ட பயிற்சிகள் மூலம் பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார்.
இந்த சிவபூமி மாற்றுத்திறனாளிகள் பாடசாலையில் சுமார் 120 மாணவர்கள் தற்போது கல்வி கற்று வருகின்றனர். இவர்களது வீட்டுக்கு சென்று பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்கான பேருந்து வசதிகள் என்பன பாடசாலையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இங்கு கற்கும் மாணவர்களுக்கு தொழில் ரீதியான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றது. கமுகு மடலில் உணவுத் தட்டு உற்பத்தி, நெய் சுட்டி உற்பத்தி, அலங்காரப் பொருட்கள் உற்பத்தி, கற்பூரம் உற்பத்தி உள்ளிட்ட பல வகையான தொழிற் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மாற்றுவலுவுடைய அவர்களாலும் ஏனையோரை போல உழைத்து வருமானம் ஈட்ட முடியும் என்ற எண்ணத்தினை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.