திருகோணமலையில் கரையொதுங்கிய பௌத்த சின்னங்கள் பொறித்த தெப்பம்
திருகோணமலை, ஈச்சிலம்பற்று, வாழைத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் இன்று காலை கரையொதுங்கிய மர்மத் தெப்பம் ஒன்று அப்பகுதி மக்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
முழுவதும் மரத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்தத் தெப்பம், பௌத்த மதக் குறியீடுகளைக் கொண்டுள்ளது.
இது மியன்மார் நாட்டில் இருந்து கடலில் மிதந்து வந்திருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக மியன்மார் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில், விசேட மதப் பண்டிகைகளின் போது சிறிய தெப்பங்களைச் செய்து, அதில் விளக்குகள் மற்றும் வழிபாட்டுப் பொருட்களை வைத்து ஆற்றில் அல்லது கடலில் விடுவது வழக்கம். அவ்வாறு கடலில் விடப்பட்ட ஒரு தெப்பமே கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடற்கரைக்கு வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஈச்சிலம்பற்று பொலிஸார், தெப்பத்தைப் பொறுப்பேற்றுள்ளதுடன், இது குறித்துப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். தெப்பத்தில் ஏதேனும் கடிதங்கள் அல்லது குறியீடுகள் உள்ளனவா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.




