Welcome to Jettamil

வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டி – தைப்பொங்கல் தினத்தில் விண்ணை அலங்கரிக்கப் போகும் வினோதப் பட்டங்கள்!

Share

வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டி – தைப்பொங்கல் தினத்தில் விண்ணை அலங்கரிக்கப் போகும் வினோதப் பட்டங்கள்!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உலகப்புகழ் பெற்ற பிரமாண்டமான பட்டப்போட்டி மற்றும் இன்னிசைத் திருவிழா நாளை (ஜனவரி 15) இடம்பெறவுள்ளது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் வல்வை உதயசூரியன் கழகம் ஆகியன இணைந்து நடத்தும் இந்த மாபெரும் வினோத விசித்திர பட்டப்போட்டித் திருவிழாவானது, வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரை (மதவடி) திடலில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

நாளைய தினம் நண்பகல் 1:00 மணி முதல் ஆரம்பமாகவுள்ள இவ்விழாவில், கலைத்திறனும் நவீன தொழில்நுட்பமும் கலந்த பிரமாண்டமான பட்டங்கள் விண்ணில் பறக்கவிடப்படவுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த நிகழ்வில், இம்முறை பல புதுமையான மற்றும் விசித்திரமான வடிவங்களைக் கொண்ட பட்டங்கள் களமிறங்கவுள்ளன.

பட்டப்போட்டியைத் தொடர்ந்து, மாலை வேளையில் ‘சுருதிலயாவின் இசைத்திருவிழா 2026’ என்ற பிரமாண்ட இன்னிசை இரவு நடைபெறவுள்ளது. தென்னிந்தியத் திரையுலகின் பிரபல கலைஞர்கள் மற்றும் ஈழத்தின் முன்னணிப் பாடகர்கள் இணைந்து இந்த இசை விருந்தை வழங்கவுள்ளனர்.

இவ்விழாவில் ருத்ரேஷ், அசானி, சஞ்சனா, கில்மிஷா, ரிக்ஷிதா, நிஷாந்த், கனிஷ்கர், தர்சு, லக்ஷனா, ரானா, சச்சனா, வர்ஷினி, கிருஷிகா மற்றும் பவதாயினி உள்ளிட்ட பல திறமைமிக்க கலைஞர்கள் மேடையை அலங்கரிக்கவுள்ளனர்.

ஆண்டுதோறும் வல்வெட்டித்துறையில் அரங்கேறும் இந்த கலாசாரத் திருவிழாவைக் காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை