புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் நான்கு முனைப் போட்டி உருவாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 19 ஆம் திகதி வேட்புமனுக்கள் கோரப்பட்டு, புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு ஜூலை 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர், தாம் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக நேற்று மாலை அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதேவேளை, ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் நேற்று மாலை அறிவித்துள்ளார்.
எனினும், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை.
ஆயினும், அவருக்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எவரையும் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்த போதிலும், கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, பொதுஜன பெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்
அதேவேளை, ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும், வேட்புமனுக்களை சமர்ப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக தலைமைத்துவத்தை எடுக்க தயாராக இருப்பதாக அவர் முன்னதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக் கூடும் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.