அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: டிசம்பரில் திருமணம் செய்யவிருந்த பெண் பலி!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தியின் பின்னால் வேகமாக வந்த வேன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வேன் சாரதி, ஒரு ஆண், இரண்டு பெண்கள் ஆகியோர் ஹோமாகம வைத்தியசாலையிலும், மூன்று குழந்தைகள் களுபோவிலை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர் தவலமவைச் சேர்ந்த 35 வயதுடைய புஷ்பகுமாரி சந்தமாலி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வணிகத் துறையில் பணிபுரிபவர் என்றும், வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பணிபுரிந்த ஒருவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வரச் சென்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சாரதியின் அதிவேகம் மற்றும் உறக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்து குறித்து மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






