ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து இரகசியங்களும், விரைவில் வெளியிடப்படும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 1000வது நாளான நேற்று தெவத்தை பசிலிக்காவில் நடைபெற்ற ஆராதனையின் போதே, கர்தினால் மல்கம் ரஞ்சித் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தனது உரையில், “ கடவுள் உண்மையை வெளிப்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.
இந்த தாக்குதலுக்கு பின்னர் கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை மனதில் கொண்டு இது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சிலர் இந்தியப் புலனாய்வு அமைப்பு வழங்கிய தகவல்களை புறக்கணித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
சில அதிகாரிகள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க முயன்றனர், ஆனால் சிலரால் தடுக்கப்பட்டனர்.
பல வருடங்களாக நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடந்தன. துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றன. மக்கள் எரியும் டயர்களில் தூக்கி வீசப்பட்டனர்.
கடந்த 74 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாட்டை ஆழமான குழிக்குள் தள்ளியுள்ளனர்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.