கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!
நீண்ட நாட்களாக நிலவி வந்த சர்ச்சைக்குரிய துப்பாக்கி விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (09) பிணை வழங்கியுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டு பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டது.
இராணுவத் துப்பாக்கி எவ்வாறு பாதாள உலகக் குழுத் தலைவரிடம் சென்றது என்பது குறித்த விசாரணைகளுக்காக கடந்த மாதம் (டிசம்பர்) 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல கம்பஹா நீதவான் அனுமதி வழங்கினார்.





