யார் இந்த லூசிந்தா லாசன்? டோக்கியோ ஒலிம்பிக் அரங்கில் வெண்கலம் வென்ற பிரித்தானிய தமிழ் யுவதி!
சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழர்களின் அடையாளத்தைப் பறைசாற்றியுள்ளார் லூசிந்தா லாசன். ஜப்பானின் டோக்கியோவில் அண்மையில் நிறைவடைந்த 2025 Deaflympics (செவிப்புலன் வலுவற்றோர் ஒலிம்பிக்) போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை 2-0 என வீழ்த்திய பிரித்தானிய அணியில் லூசிந்தா முக்கியப் பங்காற்றினார்.

அரசாங்க உதவி கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் 4,000 பவுண்டுகளைத் திரட்டி இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
லண்டனில் பிறந்த இவர், தனது தமிழ் வேர்களை மறக்காமல், ஆசியப் பெண்களுக்கு விளையாட்டுத் துறையில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
நான் 0 முதல் 7 வயது வரை எவ்வித மொழியும் தெரியாமல் இருந்தேன். செவிப்புலன் வலுவற்ற குழந்தைகளுக்கு முறையான கல்வி மற்றும் மொழிப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். எனது இந்த வெற்றி, என்னைப் போன்ற மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கணுக்கால் உபாதையால் ஓய்வில் இருக்கும் லூசிந்தா, வரும் மார்ச் 9 முதல் 22 வரை குரோஷியாவில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஃபுட்சல் (Futsal) போட்டியில் தங்கம் வெல்வதைத் தனது அடுத்த இலக்காகக் கொண்டுள்ளார்.






