கொழும்பில் தவறவிடப்பட்ட பிரித்தானியப் பெண்ணின் பணப்பை மீட்பு! – அதிகாரிகளின் நேர்மைக்கு பாராட்டு!
கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள திம்பிரிகஸ்யாய வீதியில் பிரித்தானியப் பெண் ஒருவரின் தொலைந்த பணப்பையை, ஒரு பொலிஸ் அதிகாரியும், பிரதமரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் கண்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட இந்தப் பணப்பையில், 1,000 இலங்கை ரூபாயும், சுமார் 6 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயத்தாள்களும் (யூரோக்கள், அமெரிக்க டொலர்கள், ஸ்டெர்லிங் பவுண்ட்கள்) இருந்துள்ளன. அத்துடன், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுக் கடன் அட்டைகள், ஓர் சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம், ஓர் அடையாள அட்டை மற்றும் பல மதிப்புமிக்க ஆவணங்களும் இருந்துள்ளன.
பணப்பையைத் தொலைத்த பிரித்தானியப் பெண், பிரதமரின் பாதுகாப்புப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரினால் கடந்த 23ஆம் திகதி அவரிடம் குறித்த பணப்பை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ், அதிகாரிகள் மற்றும் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு ஆகியோரின் இந்த நேர்மையான நடவடிக்கைகளுக்குப் பிரித்தானியப் பெண் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.





