இலங்கையில் இனப்படுகொலைப் போரே நிகழ்ந்தது என்று ஒப்புக்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, போரில் உயிர்நீத்தவர்களுக்காக தமது இல்லத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில்,
“ஒரு நாட்டையோ மனித இனத்தையோ போரினாலோ, வெற்றியாலோ தோற்கடிக்க முடியாது என்றும், முப்பது வருட இனப்படுகொலைப் போரில் நாம் இழந்தவை ஏராளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“வடக்கிலும் தெற்கிலும் உள்ள தாய்மார்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர். பிள்ளைகள் பெற்றோரை இழந்தனர்.
நாங்கள் சிங்களவர், தமிழ், முஸ்லிம் என பிரிந்துள்ளோம்.
அந்தப் போரினால் நான் ஒரு கண்ணை இழந்தேன். இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
போரின் முடிவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம்.
பழிவாங்குவதற்கு பதிலாக மன்னிப்போம். பிரிந்து செல்வதற்குப் பதிலாக ஒன்றாகச் சுகமாக இருப்போம்.
எம் இதயத்தில் உள்ள பிசாசுக்கு பதிலாக கடவுளை எழுப்புவோம்.
உறுதியும் அமைதியும் நிறைந்த நாளாக இன்றைய நாளை உருவாக்குவோம்.
உலகிற்கு கொஞ்சம் அன்பை காட்டுவோம். சகோதரத்துவத்தில் நிற்போம்.
இருள் சூழ்ந்திருந்த நம் நாட்டை சகவாழ்வோடு விளக்கு ஏற்றி ஒளியேற்றுவோம்.” என்று அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் ஒளிப்படம் ஒன்றையும் சந்திரிகா குமாரதுங்க தமது முகநூலில் பதிவேற்றியுள்ளார்.