Welcome to Jettamil

வங்காள விரிகுடாவில் ‘மோந்தா’ புயல் நகர்வு!

Share

வங்காள விரிகுடாவில் ‘மோந்தா’ புயல் நகர்வு!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, “மோந்தா” என்ற புயலாகத் தீவிரமடைந்துள்ளதால், வடக்கு மாகாணக் கடற்பரப்பு மீனவர்கள் மற்றும் கடற்பயணிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று திங்கட்கிழமை (ஒக்டோபர் 27, 2025) வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மோந்தா புயல் நேற்று (அக்டோபர் 26) இரவு 11.30 மணிக்கு தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 610 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இந்த நிலை வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28ஆம் திகதி காலை ஒரு புயலாக மேலும் தீவிரமடைந்து, அக்டோபர் 28 அன்று மாலை/இரவு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில், மறு அறிவித்தல் வரை கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை