கடும் பனிப்பொழிவில் உறைந்தது ஐரோப்பா: விமானம், தொடருந்து சேவைகள் முடக்கம்
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் குளிர் மற்றும் வரலாறு காணாத பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பிரான்ஸின் சார்லஸ் டி கோல் மற்றும் ஓர்லி விமான நிலையங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் வேகக் கட்டுப்பாடுகள் காரணமாக, வீதிகளில் சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளது.
லண்டன் – பாரிஸ் இடையிலான யூரோஸ்டார் தொடருந்து சேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. லண்டனில் இருந்து பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் செல்லும் சேவைகளும் நீண்ட தாமதங்களைச் சந்தித்துள்ளன.
பிரித்தானியாவின் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் பனியினால் வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் பாதுகாப்பு கருதி நூற்றுக்கணக்கான பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.





