காசா போர்நிறுத்தம்: 7 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது; இஸ்ரேல் மக்கள் மகிழ்ச்சி!
கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் காசா மீது மேற்கொண்டு வந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியின் விளைவாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் அமைப்பிடம் உயிருடன் பிணைக் கைதிகளாக உள்ள சுமார் 20 பேரில், 7 பிணைக் கைதிகளைச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 13, 2025) விடுவித்துள்ளது.
இந்தப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட தகவல் இஸ்ரேல் தொலைக்காட்சிகளில் வெளியானதும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர்.
அமைதிக்கான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஜனாதிபதி டிரம்ப் தற்போது இஸ்ரேலுக்குப் புறப்பட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட இந்தக் பிணைக் கைதிகள் பரிமாற்ற நிகழ்வு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஒரு பெரிய நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வை பொதுவெளியில் அமைக்கப்பட்ட திரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போர் நிறுத்தத்தின் மூலமாக, பஞ்சம் மற்றும் பட்டினியில் சிக்கித் தவிக்கும் இலட்சக்கணக்கான காசா மக்களின் துயரம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





