ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: 2026 வரவு செலவுத் திட்டத்தில் சலுகை வழங்க அரசு திட்டம்
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஓய்வூதியத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன (Chandana Abayarathna) இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
“700,000க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற சமூகத்தைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் இருப்பதை நாங்கள் அறிவோம்.”
“நாங்கள் ஓய்வுபெற்ற அமைப்புகளைச் சந்தித்து, பிரதி அமைச்சர், செயலாளர், பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் கலந்துரையாடுகிறோம்.”
“நாங்கள் இன்னும் அடையாளம் காண முடியாத பிரச்சினைகள் இருக்கலாம். இருப்பினும், உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்ற எதிர்பார்க்கிறது.”
2026 வரவு செலவுத் திட்டத்தில் சலுகை உறுதி
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாத ஏராளமான ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் உள்ளனர் என்றும், 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அவர்களுக்குச் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சந்தன அபயரத்ன உறுதியளித்துள்ளார்.





