கட்சி, நிறம், இனம், மதம் எதுவாக இருந்தாலும் புதிய தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு இந்தப் புத்தாண்டில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் புத்தாண்டை இன்றைய புத்தாண்டை விட வளமானதாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடுகின்றார்.
கடந்த வருடம் புத்தாண்டு வந்த போது அனைவரும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டதாகவும், இந்த புத்தாண்டில் ஒருவித ஆறுதலான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கின்றார்.
ஒரே தாயின் பிள்ளைகள் போல் முன்னோக்கிச் செல்வதன் மூலம் அனைவரும் தமது கனவுகளை நனவாக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய கருத்தின் ஊடாக புதிய வருடத்தை இன்று முதல் ஆரம்பிக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு, சிக்கனம், நம்பிக்கை, ஒற்றுமை ஆகியவற்றை மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கு நடவடிக்கை தேவை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சுபீட்சமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான பலத்தை அனைத்துப் பிரஜைகளும் பெற்றுக்கொள்ள வாழ்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு சவாலாக இருந்த இருள் சூழ்ந்த காலம் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.