கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில், இன்று (30) முதல் அடுத்த சில நாட்களில் மழை வீழ்ச்சி சிறிது அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) அறிவித்துள்ளது.
இன்று (30.12.2024) வெளியிட்ட அறிக்கையில், இப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை அல்லது அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மற்ற பகுதிகளில், மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்குள் பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில், மணித்தியாலத்திற்கு 30-35 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படலாம்.
இந்த பருவ மழை மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்கும் வகையில், பொதுமக்கள் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.