தோல்வியடைந்த ஜனாதிபதியாக தன்னால் வீட்டுக்குப் போக முடியாது என்று தெரிவித்துள்ள, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எனினும் அடுத்தமுறை தாம் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ எனக்கு ஐந்து வருடங்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்த ஜனாதிபதியாக தன்னால் வீட்டுக்குப் போக முடியாது.
அதேவேளை, நான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட மாட்டேன்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு, நாங்கள் நீண்டநேரம் காத்திருந்து விட்டோம் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் முன்னதாக சென்றிருந்தால், இந்த நிலை வந்திருக்காது.
இந்தியா மற்றும் சீனாவிடம் உதவி கேட்டுள்ளேன். குறித்த நாடுகளின் தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவர்களுக்கு கடிதம் எழுதினேன்.
பின்னர் நான் கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற மத்திய கிழக்கு தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசினேன்.
மேலும் மசகு எண்ணெய் விநியோகத்திற்கான நீண்டகால ஒப்பந்தங்களுக்கு உதவி பெற சவுதி மற்றும் ஓமானுடன் பேச விரும்புகிறேன்.
மானிய முறைக்குச் செல்ல வேண்டும். அரசு ஊழியர்களையோ அல்லது இராணுவத்தையோ குறைக்க முடியாது, ஆட்சேர்ப்பை குறைப்பதன் மூலம் நிலைமையை சமாளிக்கலாம்.
நான் அரசியல்வாதி இல்லை. அதிர்ஷ்டவசமாக அல்லது துரதிர்ஷ்டவசமாக அரசியலில் நீண்ட காலம் இருக்கும் போது, நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.
நான் இதற்கு எதிராகச் செல்ல முயற்சித்தேன் – அவர்களின் உதவி கிடைக்கவில்லை.
ஜனாதிபதி பதவி இருந்தால் அவருக்கு முழு அதிகாரமும் இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
இல்லையேல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்துவிட்டு முழுமையான வெஸ்ட்மினிஸ்டர் பாணி நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.