மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த சட்டநாதர் கோயிலில், 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம், 100க்கும் மேற்பட்ட செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுப்பு; 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
சைவ மரபின் தலைமைக் குரவரான சம்பந்தப் பெருமான் அவதரித்தருளிய சீர்காழியில் தேவாரப் பாடல்கள் எழுதப்பட்ட 400க்கும் மேற்பட்ட செப்பேடுகள் கிடைத்துள்ளன.
தமிழக வரலாற்றிலேயே இத்தகைய அற்புத நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லை என்று சொல்கிறார்கள். தேவாரத் திருமுறைகளை செப்பேடுகளில் எழுதி வைத்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
ஆனால் இப்போதுதான் முதன்முறையாக தேவாரத் திருப்பாடல்கள் எழுதப்பட்ட செப்பேடுகள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இவற்றில் இதுவரை கிடைக்காத தேவாரப் பாடல்கள் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும்.
புதிய பாடல்கள் கிடைப்பின் அவை நம் பன்னிரு திருமுறை அச்சுப் பதிப்பில் சேர்க்கப்பட்டு பரப்பப்பட வேண்டும்.
பொதுவாக, ஞானசம்பந்தப் பெருமான் சைவ மரபின் தலைமை குருநாதராகவும் ஸ்கந்த வடிவமாகவும் குறிப்பிடப்பட்டாலும், எம் அளவில் எம் கௌணிய (கௌண்டின்ய) கோத்திர முதல்வருமாவார்.
மேலும் இந்த சீர்காழிப்பதியே எம் பூர்வீகமாகவும் எம்மிடையே குறிப்புகள் உண்டு. இந்த அளவில் சீர்காழி மகா கும்பாபிஷேகம் எம்மால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும்.
தருமை ஆதீன Dharumapuram Adheenam அருளாட்சியில் இந்த சீர்காழிப் பெரிய கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வருகிற மே 24-ஆம் தேதி நடைபெறுவதற்காக கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக களிமண் எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயில் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது 2 அடியில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர்,வல்லி தேவசேனா சமேத சுப்ரமண்யர், வீர சக்தியோடு கூடிய சோமஸ்கந்தர், பூர்ண புஷ்கலா சமேத ஐயனார்,
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும்,(அரை அடி முதல் 2 அடி உயரம் உடையது ) மேலும் 400க்கும் மேற்பட்ட திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி பதிகம் தாங்கிய தேவார செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டன.
இவற்றை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேரில் பார்வையிட்டு அவைகள் எந்த காலத்துக்குரிய சிலைகள் என கேட்டறிந்தார்.
இதுவரையில் இதுபோன்று எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால், பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.