எந்த நேரத்தில் எங்கு துப்பாக்கிச் சூடு நடக்கும் என ஊகிக்க முடியவில்லை! – சஜித் பிரேமதாச விசனம்!
நாட்டில் எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாத ஒரு நிச்சயமற்ற மற்றும் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டங்கள் எவையும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானைத் தேர்தல் தொகுதியில் இன்று சனிக்கிழமை (ஒக்டோபர் 25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“மக்களை வாழ வைப்பது தான் ஒரு அரசாங்கத்தின் கொள்கையாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாட்டில் கொலைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
“பொது மக்கள் சந்திப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதேசசபைத் தலைவர் ஒருவர் அவரது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சேவையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் சாதாரண பிரஜைகளின் உயிருக்கு எவ்வாறு உத்தரவாதமளிக்க முடியும்?”
“இன்று சமூகத்தில் கொலைகளும் திட்டமிட்ட குற்றச் செயல்களும் சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் சரியான வேலைத்திட்டமொன்று இல்லை. இந்த அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, கொலைகாரர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.”
கொலை செய்யப்படுவதற்கு முன்னர் வெலிகம பிரதேசசபைத் தலைவர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகப் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தும், பொலிஸ்மா அதிபர் உட்படப் பொலிஸார் அதற்குரிய எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
“போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், கொலைகாரர்களையும் கைது செய்து, குற்றச் செயல்களை இல்லாதொழிக்க வேண்டும். அவர்களுக்குச் சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கும் நடவடிக்கைக்கு நாமும் எமது ஆதரவைத் தருவோம்,” என்று சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
மேலும், இந்தக் கொலைக் கலாச்சாரத்தை முன்னிறுத்தி, எதிர்க்கட்சியைக் கட்டுப்படுத்த வந்தால், அதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்தார். நீதி, நியாயம், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்குத் தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும், 220 இலட்சம் மக்களின் உயிரைப் பாதுகாக்கவும், மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையான பாதுகாப்பைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





