யாழில் வெள்ள நிவாரணம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் 18 வீடுகளுக்கு ரூபா 25,000 கொடுப்பனவு சிபாரிசு!
யாழ்ப்பாணம், நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபாய் கொடுப்பனவுக்கு, 18 வீடுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கொடுப்பனவு வழங்கப்படாதது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) தலையீட்டையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளநீர் உட்புகுந்த வீட்டிற்கு நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் விளக்கம் கோரியிருந்தது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்,
முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்க அதிபருக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும் போது, வெள்ள நிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமாணங்களின்படி கொடுப்பனவை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் உறுதிப்படுத்தினார்.





