யாழ்ப்பாணம் பாலைவனமாக மாறப் போகிறது – கடற்றொழில் அமைச்சர் எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களின் வெளிநாட்டுப் புலப்பெயர்வின் காரணமாக, எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் பாலைவனம் போன்று காட்சியளிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ள நிலையில், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதால், தமிழர்களின் அரசியல் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டுக் கலாசாரம் போன்ற குற்றச் செயல்களால் இளைஞர்களும் படித்த சமூகமும் வடக்கை விட்டு வெளியேறும் நிலை உருவாகி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் மாபியாக்களின் காரணத்தினால் அங்குள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குப் பல சவால்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் மக்களைப் பாதுகாப்பதற்காக அந்தப் பிரதேசங்களை துரித அபிவிருத்தியை நோக்கி நகர்த்த வேண்டும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.





