யாழ். பருத்தித்துறை சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறிச் சந்தை வியாபாரிகள் இணைந்து பருத்தித்துறை நகரில் இன்று வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 24) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த மரக்கறிச் சந்தை, மீன் சந்தை வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திற்குப் பருத்தித்துறை நகரசபை செயலாளர் தலைமையில் மாற்றம் செய்யப்பட்டது.
குறித்த புதிய சந்தைக் கட்டடத்தில் போதிய இடவசதிகள் இல்லை எனவும், மழை நேரங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மரக்கறி வியாபாரிகள் நகரசபை தவிசாளர் உள்ளிட்டோரிடம் மகஜர்களைக் கையளித்திருந்தனர்.
அது தொடர்பில் நகரசபை அமர்வின்போது, நிபுணர்குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஆராய்ந்து முடிவெடுப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும், இதுவரை தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, மரக்கறி வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து இன்று இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.





