இலங்கையில் சர்வதேச உதவி மாநாட்டை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த மாநாட்டை வெற்றியடையச் செய்வதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இந்த சூழ்நிலையை சமாளிக்க அரசுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஒரு சர்வதேச உதவி மாநாட்டுக்கு அழைப்பு விடுங்கள். நாங்கள் அதில் கலந்து கொள்வோம்.
எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லாமல், இந்த நாட்டின் மக்களுக்கு தேவைப்படும் உதவியைப் பெறுவதற்கான வெளிப்படையான மற்றும் உண்மையான முயற்சிகளுக்கு ஆதரவளிப்போம்.
இந்த நாட்டின் 22 மில்லியன் மக்கள் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி இதைச் செய்யத் தயாராக உள்ளது.
இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை ரத்து செய்ய வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்தோம்.
இலங்கைக்கு உதவ இந்திய அரசை ஊக்குவித்தோம்.
நாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருக்கிறோம்.
பணக்காரர்களுக்கு வரி குறைப்பு வழங்கப்பட்ட போது கைதட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களே, மீண்டும் நிதியமைச்சரின் வரி அதிகரிப்பு அறிவிப்பிற்கு கைதட்டுகிறார்கள்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கொள்கைகளினால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது. அவர்கள் பதவி விலக வேண்டும்.
புதிய ஆணையைப் பெற எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியும், பிரதமரும் பதவியில் இருக்கும் வரை நாட்டை இருள் தான் சூழ்ந்திருக்கும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.