காங்கேசன்துறைக்கும்- காரைக்காலுக்கும் இடையிலான பயணிகள் மற்றும் வர்த்தக கப்பல் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையில் விமான சேவைகளையும், காரைக்கால் – காங்கேசன்துறை இடையே கப்பல் சேவையையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கான,அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“காரைக்கால் – காங்கேசன்துறை கப்பல் பயணத்துக்கு சுமார் 22 மணி நேரம் தேவைப்படும்.
நாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள கடல் ஆழமாக இல்லாததால், காரைக்கால் துறைமுகம் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதால், புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான, புரிந்துணர்வு உடன்பாடும், ஜூன் 13 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருளையும், உரம், பாம் எண்ணெய், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் கொள்முதல் செய்யும் வகையில் போக்குவரத்துச் சேவைகள் விரைவில் தொடங்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.