தாழ் அமுக்கப் பிரதேசம் இலங்கைக்கு அருகில்: வடக்கில் ஓரளவு பலத்த மழைக்கு வாய்ப்பு!
இலங்கையின் வட கரையை அண்மித்ததாக நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது, மேலும் தீவிரமடைந்து இன்று மாலை வேளையில் தமிழகத்தின் வட கரை மற்றும் தென் ஆந்திரப் பிரதேசங்கள் ஊடாக நகர்ந்து செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஒக்டோபர் 22, 2025) தெரிவித்துள்ளது.
இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் காலநிலை சீரற்று காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இந்தப் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 மி.மீ. வரையிலான ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று:
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 – 40 கி.மீ. வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
கடற்பகுதிக்கான எச்சரிக்கை (மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அவதானம்):
இலங்கையின் வட கரையை அண்மித்ததாக தாழ் அமுக்கப் பிரதேசம் நிலைகொண்டுள்ளதால், நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் நிலை:
காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள்: மணித்தியாலத்திற்கு 50 – 60 கி.மீ. இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று வீசக்கூடும். இதனால் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு ஊடாகக் காலி வரையான கடற்பிராந்தியங்கள்: மணித்தியாலத்திற்கு 50 – 55 கி.மீ. இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று வீசக்கூடும். இதனால் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.





