பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான பயணங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நேற்று ஆரம்பமாகவில்லை.
ஜூலை 1ஆம் திகதியில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சேவையை மீளத் தொடங்குவதில் இழுபறிகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பலாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் நேற்று ஆரம்பிக்கப்படாமைக்கு இந்திய தரப்பே காரணம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
காக்கை தீவில் புதிதாக அமைக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“இந்தியாவில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. விமானங்கள் இங்கு வந்து திரும்பி செல்வதற்கு எரிபொருள் இல்லை.
அத்துடன் இந்தியாவில் இருக்கக் கூடிய சில சட்டச் சிக்கல்கள் காரணமாகவும் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விமான சேவைக்கு இலங்கை அரசு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
இந்த சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்பட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.