இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கொழும்பில் உள்ள இராஜதந்திர உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திர உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சர் தனது உரையின் போது, இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இதன் போது விபரித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசிய வெளிவிவகார அமைச்சர், இந்த இக்கட்டான நேரத்தில் தூதுவர்கள் தங்களின் முழுமையான ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்தும் அமைச்சர் குறிப்பிட்டதுடன், இந்த தனித்துவமான சட்டத்தின் சில முக்கிய அம்சங்களை கோடிட்டுக் காட்டினார்.
இந்நிகழ்வில் பங்குபற்றிய இராஜதந்திர சமூகத்தினருக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்ததுடன் , சவாலான இந்த காலகட்டத்தில் இலங்கைக்கு தமது ஆதரவையும் அனுதாபத்தையும் வழங்குமாறு தூதுவர்களிடம் பீரிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் சுருக்கமான விளக்கங்களை இதன் போது முன்வைத்ததுடன் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளனர்.