உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், உடல்நலக்குறைவுக் காரணமாக நேற்று காலமானார்.
82 வயதான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்த முலாயம் சிங் யாதவ் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று காலமானார்.
முலாயம் சிங் யாதவ் 10 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 1 முறை சட்ட மேலவை உறுப்பினராகவும், 7 முறை லோக்சபா உறுப்பினராகவும் தேர்த்தெடுக்கப்பட்டிருந்தார். முலாயம் சிங் யாதவின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





