2028இல் ஒரு பவுண் தங்கம் ரூ. 07 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு! – இலங்கை மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தி!
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரும் என JP மோர்கன் (JP Morgan) நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பு, இலங்கையில் தங்கத்தை நாடும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,100 அமெரிக்க டொலருக்கு வர்த்தகமாகி வரும் நிலையில், 2028ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 8,000 அமெரிக்க டொலர்கள் வரை உயரும் என JP மோர்கன் கணித்துள்ளது.
இலங்கையில் தாக்கம்:
உலக சந்தையில் நிலவும் தங்க விலைக்கு ஏற்பவே இலங்கையிலும் விலை நிர்ணயிக்கப்படும் என்பதால், உலகளவில் தங்கத்தின் விலை 8,000 டொலர்களாக உயர்ந்தால், 2028ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு பவுண் (24 கரட்) தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 690,000 ரூபாயாக அதிகரிக்கும் என அகில இலங்கை நகை விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தற்போதைய விலை நிலவரம்:
இலங்கையில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாகச் சரிந்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபாய் குறைந்துள்ளது.
உள்ளூர் சந்தையில் கடந்த வாரம் சாதனை விலையாக 24 கரட் தங்கத்தின் விலை 410,000 ரூபாயாக உயர்ந்திருந்தது.
எனினும், நேற்று வியாழக்கிழமை (ஒக்டோபர் 23) செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 24 கரட் தங்கத்தின் விலை 330,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 302,300 ரூபாயாகவும் பதிவானது.
நேற்று ஒரு நாளில் மட்டும் தங்கத்தின் விலை மேலும் 10,000 ரூபாய் குறைந்தது குறிப்பிடத்தக்கது.





