இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், நேபாள அரசாங்கம், இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேசப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
இஷாரா செவ்வந்தியுடன் ஜேகே பாய் உட்பட மேலும் ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி நேற்று புதன்கிழமை இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் (CID) ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





