ரஷ்யாவின் ஏரோ புளொட் விமானம் நீதிமன்ற உத்தரவினால் கட்டுநாயக்கவில், தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
ரஷ்ய விமானங்கள் இங்கு வரும்போது கொழும்பில் இருந்து புறப்படுவதை தடை செய்யக் கூடாது என இரு நாட்டு உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகள் எழுத்துப்பூர்வ புரிந்துணர்வுக்கு வந்திருந்த நிலையில், ஏரோபுளொட் விமானத்தை தடுத்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரவிருக்கும் குளிர்காலத்தில் சுமார் 4 இலட்சம் ரஷ்யர்கள் கொழும்புக்கு வரத் திட்டமிட்டுள்ள நிலையிலேயே, இந்தப் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.
ஏரோபுளொட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதுவர் ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாகவும், ஏரோ புளொட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மோசமடைவதை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நெருக்கடிக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமல்ல என்றும், நீதிமன்ற உத்தரவினால் தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டதாகவும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
அத்துடன், நீதிமன்றத் தடையை நீக்க கோரி, மேன்முறையீடு செய்யப்பட்ட போதும், அந்த மனு மீதான விசாரணை 8ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
எனினும், நாளை மீண்டும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களமும், நீதியமைச்சும் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இதனிடையே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்குமாறும், இந்த தடை உத்தரவுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்துமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிவிவகார செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, இந்த விடயம் தொடர்பாக, இலங்கைக்கான ரஷ்ய தூதுவரிடம் இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கியதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.