முல்லைத்தீவில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற பொங்கல்விழா
முல்லைத்தீவு – முள்ளியவளை வடக்கு, சஞ்சீவன் குடியிருப்பு, சஞ்சீவன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், பொங்கல் விழாவும், தைத்திருநாள் விளையாட்டுப் போட்டிகளும் மிகச் சிறப்பாக இடம்பெற்றன.
சஞ்சீவன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வானது முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசனின் தலைமையில் இடம்பெற்றது.
அந்தவகையில் விருந்தினர் வரவேற்புடன் தொடச்கிய இந் நிகழ்வில் தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றதுடன், மரபுவழியில் தைப்பொங்கல் பொங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகள் இடம்பெற்றன.
குறிப்பாக விளையாட்டுப்போட்டிகள் வரிசையில் ஆண், பெண் இருபாலாருக்குமான கரப்பந்துப்போட்டிகள் இடம்பெற்றதுடன், பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளான, கயிறு இழுத்தல், தாச்சிப்போட்டி என்பவற்றுடன், சிறார்களுக்கான வளையாட்டுப்போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்தோடு கரப்பந்தாட்டப்போட்டியில் முதலாம் இடம்பெற்ற அணிக்கு பத்தாயிரம்ரூபா பணப்பரிசுடன் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதுடன், இரண்டாமிடத்தைப் பெற்ற அணிக்கு ஐயாயிரம் ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.
அதன்படி கரப்பந்தாட்டம் ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தினை ஹிச்சிராபுரம் பகுதியைச் சேர்ந்த இணைந்தகைகள் அணியும், இரண்டாமிடம் மங்களேஸ்வரா வற்றாப்பளைஅணியும் பெற்றுக்கொண்டன.
அதேபோல் பெண்கள் பிரிவில் கரப்பந்தாட்டத்தில் முதலாமிடத்தினை வற்றாப்பளை மங்களேஸ்வரா அணியினரும், இரண்டாமிடத்தினை மாமூலை விண்ணொளி விளையாட்டுக்கழக அணியினரும் பெற்றுக்கொண்டனர்.
மேலும் கரப்பந்தாட்டம் மற்றும், தாச்சிப்போட்டி, கயிறு இழுத்தல், சிறார்களுக்கான விளையாட்டுப்பபோட்டிகள் என்பவற்றில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு இதன்போது பரிசில்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சமூக ஆர்வலரும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேசக்கிளையின் செயலாளருமான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் கலந்துகொண்டிருந்ததுடன், முள்ளியவளை வடக்கு கிராமஅலுவலர் திருமதி.வில்வரட் ஜொனுசியா, சமூக ஆர்வலர் ம.மரியஎனஸ்ரின், நாவற்காடு ஆஞ்சனேயர் ஆலய பூசகர், முன்னாள் பிரதேசசபை உப அலுவலகப் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை இந்த பொங்கல் விழாவையும், விளையாட்டு நிகழ்வுகளையும் கண்டுகளிப்பதற்காக பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.