பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதவி அவசியமில்லை – நாமல் தெரிவிப்பு
எதிர்க்கட்சியின் அரசியல் சக்திகளை நாங்கள் தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறோம். இந்த நாட்டின் மக்களுக்காக நிற்பதும், அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை எடுத்துரைப்பதும், மக்களின் பிரச்சினைகளை அடக்குவதற்கும் நாட்டை ஜனநாயக விரோத, சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்லவும் அரசாங்கம் மேற்கொள்ளும் கடுமையான முயற்சிகளை எதிர்ப்பதுமே எங்கள் முக்கிய குறிக்கோள் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுவான சித்தாந்தத்தால் ஒன்றுபட்ட பல அரசியல் கட்சிகள் ஒரு பலமான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க ஒன்றிணைந்து வருகின்றன. இது வரலாற்றில் அசாதாரணமானது அல்ல. 2015ஆம் ஆண்டின் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் போது, கூட்டு எதிர்க்கட்சியில் 34 உறுப்பினர்கள் இருந்தனர், அதே சமயம் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவரும் அரசாங்கத்துடன் இணைந்திருந்தனர். இது இருந்தபோதிலும், எதிர்க்கட்சியின் முக்கிய கடமையை நாங்கள் நிறைவேற்றினோம்.
மக்களுக்காகப் போராடுவதற்கும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், பதவிகளும் உத்தியோகபூர்வ நிலைகளும் அவசியமில்லை. இந்த நாட்டில் உண்மையான எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உண்மையான அரசியல் சக்தி இப்போது ஒன்றிணைக்கப்பட்டு வருவதாக நாங்கள் நம்புகிறோம்.
எதிர்க்கட்சிக்குள் இருக்கும் சில தனிநபர்கள் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகத் தங்கள் நம்பிக்கைகளை முழுமையாக நிலைநிறுத்த முடியாமல் உள்ளனர் என்பதை நாங்கள் உணர்கிறோம். இதை உணர்ந்துள்ள ஒரு அரசியல் சக்தியாக நாங்கள் இருக்கிறோம்.
மற்றவர்கள் தங்கள் சரியான நேரத்திற்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, மக்கள் மிகவும் தேவைப்படும்போது நாங்கள் அவர்களுக்காக நிற்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (ளுடுPP), மக்களுக்காகவும் அவர்களின் தேவைகளுக்காகவும் நிற்பதற்குத் தேவையான மக்கள் சார்பு அரசியல் சக்தியைத் தீவிரமாக உருவாக்கி வருகிறது என அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.





